சினிமா செய்திகள்
கார்த்தி

15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி

Update: 2022-02-23 05:38 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி அவருடைய 15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அவருடைய சினிமா பயணம் தொடங்கி 15 வருடம் ஆகியிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். இவருடன் இணைந்து பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார். கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருடைய சினிமா பயணத்தில் இவருக்கு பருத்திவீரன் முக்கியமாக திரைப்படமாக அமைந்தது. பெரிதும் பேசப்பட்ட இப்படத்தில் கார்த்தியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.


பருத்திவீரன்

அதன்பின் அவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ் என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இன்று (23-02-2022) கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் வெளியாகி 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை கார்த்தி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.


கார்த்தியின் பதிவு

அவர் அதில் குறிப்பிட்டிருப்பது, ”பருத்திவீரன் படத்தின் மூலம் எனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியதை நான் பாக்கியமாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சார் வடிவமைத்து என்னை பயிற்றுவித்தார், எல்லா புகழும் அவருக்கே. கற்றுக்கொண்ட பல பாடங்களில், நான் செய்யும் வேலையில் மூழ்கி மகிழ்வதற்கு அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த விதத்தை நான் இன்னும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச் சென்ற அமீர் சார், ஞானவேல், அண்ணா, என் அன்பான ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.


Tags:    

Similar News