சினிமா

ரஜினி-கமலை விட சிம்பு முதிர்ச்சியுடன் செயல்பட்டுள்ளார் - கன்னட நடிகர் அனந்த நாக் பேட்டி

Published On 2018-04-11 10:56 GMT   |   Update On 2018-04-11 10:56 GMT
காவிரி போராட்டம் தொடர்பாக ரஜினி-கமலை விட சிம்பு முதிர்ச்சியுடன் செயல்பட்டுள்ளதாக கன்னட நடிகர் அனந்த நாக் தெரிவித்துள்ளார். #CauveryManagementBoard #Simbu
கன்னட நடிகர் அனந்த நாக் அளித்த பேட்டி வருமாறு:-

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தபின்பு அவர்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். காவிரி பிரச்சினையில் வித்தியாசமான அணுகுமுறையை கையாள்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் அவர்கள் தமிழக அரசியல் தலைவர்கள் போல் வழக்கமான பழைய பாணி அரசியலையே கையாள்கிறார்கள்.

நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. தமிழர்கள் நல்ல மனிதர்கள். மிகவும் மென்மையானவர்கள். கன்னடர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

கர்நாடகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்பட உள்ளது. அதனால் இங்கு அரசியல் சூடுபிடித்துள்ளது. மத்திய அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் உடனடி தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை. பின்னர் ஏன் அவர்கள் இந்த வி‌ஷயத்தில் கொதித்து எழ வேண்டும்.

இளம் நடிகரான சிம்பு போராட்டம் நடத்தாமல் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வித்தியாசமான முறையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவருக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலிடம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அரசியலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பழைய தமிழக அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள்.



ஆப்பிரிக்காவில் ஓடும் நைல்நதி பிரச்சினை கூட தீர்க்கப்பட்டுவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் காவிரி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை தமிழக அரசியல்வாதிகள் விரும்பவில்லை. காரணம் அது அவர்களது அரசியல் வாழ்வுக்கு உதவுகிறது.

இது 138 ஆண்டுகால பிரச்சினை. இதில் முடிவு ஏற்பட இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா?

கன்னடர்கள் மென்மையானவர்கள், நேர்மையானவர்கள். இதைப் பார்த்து தமிழர்கள் நம்மை பலவீனமானவர்கள் என நினைக்கிறார்கள். நம்மை சீண்டிப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் கொடுத்தால் புரிந்துகொள்வார்கள். அமைதியாகி விடுவார்கள்.

தமிழக அரசும், அரசியல்வாதிகளும் நடிகர்கள் ரஜினி, கமலும் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை ஏற்கத்தயாராக இல்லை.

இந்தியா போன்ற கூட்டாட்சி நாட்டில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அவசியம். தமிழகத்துக்கு அந்த அடிப்படை தெரியவில்லை. நாம் அவர்களுக்கு அதை சொல்லித் தரவேண்டும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #CauveryManagementBoard #Simbu
Tags:    

Similar News