சினிமா

கிராமப் பின்னணியில் உருவாகும் விஸ்வாசம், விஜய் 62 படங்கள்

Published On 2018-04-07 08:06 GMT   |   Update On 2018-04-07 08:06 GMT
விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க கதாநாயகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KadaikuttySingam
முந்தைய காலங்களில் நகர்ப்புற கதைகளுக்கு சமமாக கிராமப்புற கதைகளும் தமிழ் சினிமாவில் இடம் பிடித்தன. அதன் பிறகு படிப்படியாக அது குறைந்து விட்டது. கடந்த ஆண்டும் சென்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும் திரைக்கு வந்த தமிழ் படங்களில் கிராமப்புற கதைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு கிடாயின் கருணை மனு, கொடிவீரன், மன்னர் வகையறா, மதுரை வீரன் உள்ளிட்ட சில படங்களே கிராமப்புற பின்னணியில் வந்தன.

ஆனால் இந்த ஆண்டு கிராமப்புற பின்னணியில் நிறைய படங்கள் உருவாகி வருகின்றன. விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் படம் கிராமம், நகரம் என இரண்டு பின்னணிகளில் உருவாகிறது. இந்த படத்தில் அரசியலுடன் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் விசுவாசம் படமும் கிராமப்புற பின்னணி கொண்ட படம் தான். சிவகார்த்திகேயனின் சீமராஜா, உதயநிதியின் கண்ணே கலைமானே, விஷாலின் சண்டக்கோழி-2 ஆகியவையும் கிராம விவசாய பின்னணியை கொண்ட கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது.



பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கதை. இவை தவிர சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் வெள்ளை யானை, அமீர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை, காக்காமுட்டை மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி, கத்திரிக்கா வெண்டக்கா உட்பட பல படங்கள் விவசாயம் சார்ந்த கதைகளாக உருவாகி வருகின்றன.

காவிரி மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் தீவிரமாகி உள்ளதால் இயக்குனர்கள் அதைசார்ந்த கதைகளை அதிகம் உருவாக்குவதாகவும் நடிகர்களும் விவசாய பின்னணி படங்களில் நடிக்க ஆர்வப்படுகின்றனர் என்றும் தயாரிப்பாளர் ஒருவர் கூறினார். #KadaikuttySingam
Tags:    

Similar News