சினிமா

கைத்தறி ஆடை விளம்பரத்துக்கு சமந்தா அதிக பணம் வாங்கினாரா? - மந்திரி விளக்கம்

Published On 2018-03-29 09:20 GMT   |   Update On 2018-03-29 09:20 GMT
கைத்தறி துணிகளை விளம்பரப்படுத்துவதற்காக நடிகை சமந்தாவுக்கு தெலுங்கானா அரசு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தெலுங்கானா மந்திரி இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். #Samantha
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஐதராபாத்தில் குடியேறி உள்ள சமந்தாவை தெலுங்கானா அரசு கைத்தறி ஆடைகளுக்கான விளம்பர தூதுவராக நியமித்து உள்ளது. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் மகனும் மாநில மந்திரியுமான தாரங்க ராமராவ் இந்த பொறுப்பை சமந்தாவுக்கு வழங்கினார்.

இதன் மூலம் கைத்தறி துணிகள் விற்பனை செய்யும் அரசின் பல்வேறு முயற்சிகளுக்கு சமந்தா உதவியாக இருந்து வருகிறார். கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கைத்தறி துணிகளை பொதுமக்கள் வாங்கி உடுத்த வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கைத்தறி துணிகளை விளம்பரப்படுத்துவதற்காக சமந்தாவுக்கு தெலுங்கானா அரசு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. சமூக நலம் சார்ந்து நல்ல நோக்கத்துக்காக செய்யப்படும் இந்த வேலைக்காக சமந்தா அதிக பணம் வாங்கியது முறையல்ல என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.



இதற்கு மந்திரி தாரங்க ராமராவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

“தெலுங்கானா அரசின் கைத்தறி துணிகள் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதற்காக நடிகை சமந்தா பணம் எதுவும் வாங்கவில்லை. இலவசமாகத்தான் கைத்தறி துணிகளுக்காக அவர் பிரசாரம் செய்து வருகிறார். கைத்தறி தொழிலாளர்கள் நலனுக்காக இந்த பணியை செய்ய அவராகவே முன்வந்தார். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். இதற்காக அரசு கருவூலத்தில் இருந்து அவருக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை.”

இவ்வாறு மந்திரி தாரங்க ராமராவ் கூறினார். #Samantha
Tags:    

Similar News