சினிமா
அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

சென்னையில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம் - நடிகர், நடிகைகள் பங்கேற்பு

Published On 2018-03-12 05:10 GMT   |   Update On 2018-03-12 05:10 GMT
சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடிகை ஸ்ரீதேவிக்கு நேற்று அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். #Sridevi #BoneyKapoor
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து ஸ்ரீதேவி உடல் மும்பை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் ஸ்ரீதேவியின் அஸ்தியை கடந்த வாரம் சென்னை கொண்டு வந்து கடலில் கரைத்தனர்.

ஸ்ரீதேவி மறைவுக்கு பல்வேறு நகரங்களில் தற்போது அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மும்பையிலும், ஐதராபாத்திலும் அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தி, தெலுங்கு நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னையிலும் அஞ்சலி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு இந்த அஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மும்பையில் இருந்து வந்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையும் நடந்தது. இதில் தமிழ் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



நடிகை ஸ்ரீதேவி மறைவையொட்டி நடிகர் சங்கத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.


அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நடிகர்-நடிகைகள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, ஸ்ரீகாந்த், அருண்விஜய், வின்சென்ட் அசோகன், வினீத், லதா ரஜினிகாந்த், வைஜயந்திமாலா, ராதிகா சரத்குமார், ஜோதிகா, லதா, மீனா, சினேகா, பூர்ணிமா, சுகாசினி, விமலா ராமன், சோனியா அகர்வால், காயத்ரி ரகுராம், மகேஷ்வரி, குட்டி பத்மினி, சத்தியபிரியா, புவனேஸ்வரி,

டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தங்கர்பச்சான், தயாரிப்பாளர்கள் தாணு, டி.சிவா, ஐசரி கணேஷ், டி.ஜி.தியாகராஜன், ராம்குமார், ஏ.எம்.ரத்னம், ராஜ்குமார், சேதுபதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

ஸ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க சென்னையில் நேற்று அஞ்சலி கூட்டத்துக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பசுபதி, அயூப்கான், பிரகாஷ், மனோபாலா, ஹேமச்சந்திரன், நடிகைகள் அம்பிகா, ஸ்ரீபிரியா, சத்யபிரியா, குட்டிபத்மினி, சிவகாமி உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள். #Sridevi #BoneyKapoor

Tags:    

Similar News