சினிமா

வறுமையில் வாடும் ரங்கம்மாள் பாட்டிக்கு நடிகர் சங்கம் நிதியுதவி

Published On 2018-02-14 14:27 GMT   |   Update On 2018-02-14 14:27 GMT
படத்தில் நடிப்பதால் வரும் சம்பளம் போதாமல், வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் எலெக்ட்ரானிக் பொருட்களை விற்று பிழைப்பை நடத்தி வந்த ரங்கம்மாள் பாட்டிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நிதியுதவி அளித்திருக்கிறது.
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி.ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500 ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. 

இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அவரை பற்றி விசாரித்து, மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர். அங்கே சென்ற போது தான் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்பதும், படபிடிப்பு தளத்தில் அவருக்கு கிடைத்த 500 ரூபாய் போதாததால், மெரினா கடற்கரையில் ஹெட்போன் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களை அங்கே விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்கையை நடத்தி வருகிறார் என்பதும் தெரியவந்தது. 



இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு உதவி தொகையாக ரூ.5000 வழங்கியது. ரங்கம்மாள் பாட்டி பெஃப்சி அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினர். ஒருவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் சங்கத்தின் மூலம் அவருக்கு உதவி தொகையை வழங்க முடியும். ஆனால் பாட்டியின் வறுமையை கருத்தில் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு இந்த உதவியை செய்துள்ளது. மேலும் அவருக்கு எந்த வகையில் உதவலாம் என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

சமீபத்தில் மருத்துவ உதவி இல்லாமல் தவித்துவந்த நடிகை பிந்துகோஷ்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ரூ.5000 உதவி தொகை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பிந்துகோஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அல்ல. இருந்தாலும் அவரது தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அவரை உறுப்பினராக இலவசமாக சங்கத்தில் சேர்த்து இந்த உதவி தொகையை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றியும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆலோசித்து வருகிறது.
Tags:    

Similar News