சினிமா

ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது: மாதவன்

Published On 2018-01-17 05:13 GMT   |   Update On 2018-01-17 05:13 GMT
எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தகுந்தது என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் இந்தியில் நடிக்கும் ‘பிரீத்’ என்ற ஆன்-லைன் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக மும்பை வந்த அவரிடம், நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு மாதவன் பதில் அளித்து கூறியதாவது:-

அவர்கள் இப்போது தான் தொடங்கி இருக்கிறார்கள். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் சிறந்தது எதுவோ, அதை நான் மிகவும் வரவேற்கிறேன். பொதுமக்களுக்கு சேவைபுரிவது உங்கள் நோக்கமாக இருந்தால், அது நல்லது. ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எடுத்த இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களது அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது.

ஒரு நடிகனாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியல் முத்திரை தேவை இல்லை. நான் அரசியல் சாய்வற்றவன். எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. நான் ஒரு நடிகன். இது தான் எனது பணி. என்னால் முடிந்தவரை என்னென்ன வடிவங்களை செய்ய முடியுமோ அதை நன்றாக செய்வேன். இதில், மிகவும் தெளிவாக இருக்கிறேன்.



தமிழில் ‘ஹிட்’ ஆன விக்ரம் வேதா படம் இந்தியில் நிச்சயமாக ‘ரீமேக்’ செய்யப்படும். அதில், நான் நடிப்பேனா என்பது தெரியாது. என்னுடைய சொந்த படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்வதில் இருந்து நான் விலகியே இருக்கிறேன்.

தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு சிறப்பு பட்டம் அளிக்கிறார்கள். எனக்கும் ‘புன்னகை மன்னன்’ என்ற பட்டம் அளிக்க விரும்பினார்கள். ஆனால், நான் வேண்டாம் என்று கூறியதால், என் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தமட்டில், மிகப்பெரிய விருது என்னவென்றால், சினிமாவில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக முன்னணி நடிகராக நீடிப்பது தான். இது மிகவும் உயரிய விருது. இந்த சாதனையை எண்ணி பெருமைப்படுகிறேன். வெகு சிலரால் மட்டுமே இந்த சாதனையை எட்ட முடியும்.

இவ்வாறு மாதவன் தெரிவித்தார்.
Tags:    

Similar News