சினிமா

அரசியல் குறித்த முடிவை அறிவிப்பார் ரஜினிகாந்த்: சகோதரர் சத்தியநாராயணராவ்

Published On 2017-12-12 10:14 GMT   |   Update On 2017-12-12 10:14 GMT
அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு திருமண மண்டபத்தில், மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 68-வது பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் பங்கேற்று, 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக கொண்டாடி வருகின்றனர். அவர் மீது தமிழக மக்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருந்தால் இப்படி கொண்டாடுவார்கள். நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. எனது தாய், தந்தை பிறந்தது கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிகுப்பம் தான். எனவே, நானும், ரஜினியும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் தான். இன்றும் நாச்சிக்குப்பத்தில் தான் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள்.

இந்த விழாவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் துப்புரவு தொழிலாளர்கள் பவித்திரமான வேலையை செய்கின்றனர். இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. எனவே, துப்புரவு தொழிலாளர்களான நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து, மேல்மட்டத்திற்கு சென்று நன்றாக வைத்துகொள்ள வேண்டும்.



அத்துடன் நீங்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி துப்புரவு பணியில் ஈடுபட வேண்டும். ரஜினிகாந்திற்கு எந்த ஆசையும் இல்லை. நீங்கள் எல்லாம் அவருக்கு கொடுத்துள்ளர்கள். மக்களுக்கு செய்ய வேண்டும் என்பது தான் அவரது ஆசை. ஆனால் எந்த விதத்தில் செய்வார் என்பது தெரியாது. அவர் தான் அது குறித்து முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது போன்ற விழாக்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து அவரே தெரிவிப்பார். அதுகுறித்து நான் எதுவும் கூற இயலாது. அவர் அரசியலுக்கு வந்தால் சந்தோஷம். அரசியல் குறித்த அவரது முடிவை விரைவில் தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News