சினிமா
சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் காரசார வாக்குவாதம் நடந்த போது எடுத்த படம்.

விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்

Published On 2017-12-11 05:48 GMT   |   Update On 2017-12-11 05:48 GMT
சென்னையில் நடந்த பட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விஷால் பதவி விலக கோரி மோதல்-ரகளை நடந்தது. இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் முன்னிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் விஷால் தலைமை தாங்கினார். செயலாளர் கதிரேசன், துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஷால் பதவி ஏற்ற பின்பு நடக்கும் முதல் பொதுக்குழு என்பதால் பரபரப்பான எதிர்பார்ப்புடன் தொடங்கியது. மூத்த தயாரிப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். கூட்டம் ஆரம்பித்த உடனேயே மேடையில் நிர்வாகிகள் இல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதாக நடிகர் மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

விஷால் பேசத்தொடங்கியதும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். விஷால் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன், “தயாரிப்பாளர் சங்கம் அரசை அனுசரித்து செல்ல வேண்டும் என்று சங்கத்தில் விதிமுறைகள் உள்ளன. விஷால் அதனை மீறிவிட்டார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்தது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்த நடவடிக்கை. இதனால் அரசிடம் இருந்து திரைப்படங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விஷால் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பேசினார்.

அவருக்கு ஆதரவாக எதிர்ப்பு கோஷ்டியினர் விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் விஷால் தொடர்ந்து பேச முடியவில்லை. சங்கத்தின் செயலாளர் கதிரேசன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்து சங்கத்தின் பொதுக்குழுவின் ஒப்புதலை கேட்டார்.



ஆனால் சிலர் எழுந்து நின்று சங்கத்தின் இருப்பில் இருந்த ரூ.7 கோடியில் முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடந்து இருக்கிறது என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. கூட்டம் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே பாதியில் முடிந்துவிட்டது.

டி.ராஜேந்தர், முக்தா சீனிவாசன், ஆர்.பி.சவுத்ரி, தங்கர் பச்சான், சேரன், பி.வி.ராஜேந்திரன், எஸ்.வி.சேகர். அருண் பாண்டியன், திருமலை, சிவசக்தி பாண்டியன், உதயா, ஜே.கே.ரித்திஷ், மன்னன், உள்பட 400-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் நடந்த மோதல் குறித்து விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் சிலர் என்னை பேசவிடாமல் தடுத்து மைக்கை பிடுங்கினார்கள். தகாத வார்த்தைகளால் பேசினார்கள். அடிக்கவும் வந்தனர். சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளனர். அலுவலகத்துக்கு வந்து பணம் இருக்கிறதா? இல்லையா என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. எனவே நாங்கள் ராஜினாமா செய்ய தேவை இல்லை. தொடர்ந்து சங்கத்துக்கு நல்லது செய்வோம். அரசு மானியம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது”

இவ்வாறு விஷால் கூறினார்.



பொதுக்குழுவில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுக்குழு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவித்தனர். எங்களுக்கு சோறுபோட்டது சினிமா. அதனால் இதில் கலந்துகொள்ள வந்தோம். ஆனால் 12 மணிக்கு தான் தொடங்கியது. கள்ள ஓட்டில்தான் அவர்கள் வெற்றிபெற்றனர். கள்ள அடையாள அட்டையுடன் வந்தவர்கள் பொதுக்குழுவில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னாள் நிர்வாகிகளை பேச அனுமதிக்கவில்லை. தமிழ் தாய் வாழ்த்து பாடும்போது நிர்வாகிகள் யாரும் மேடையில் இல்லை. அதை தட்டிக் கேட்டதற்கு எதிர்த்தார்கள்.

அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் சட்டதிட்ட விதி முறைகள் உள்ளன. அது கடைப்பிடிக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியிட்டது முறையல்ல என்று பொதுக்குழுவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசுக்கு எதிராக விஷால் செயல்படுவதால் படங்களுக்கு மானியம் கிடைக்காது என்றனர். எனவே விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. 



கேள்வி எழுப்பியவர்களை தாக்க வந்தார்கள். முன்னாள் நிர்வாகத்தினர் ரூ.7 கோடி வைப்பு நிதி வைத்து இருந்தனர். அந்த பணத்தை தொடமாட்டேன் என்று விஷால் கூறினார். பணத்துக்கான கணக்கு கேட்டதற்கு அடிக்க வந்தார்கள். விஷால் நல்ல முறையில் அமைச்சர்களிடம் பேசி இருந்தால் கேளிக்கை வரி விதித்து இருக்க மாட்டார்கள்

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

டைரக்டர் சேரன் கூறும்போது, “பொதுக்குழு உறுப்பினர்கள் 450 பேர் கூட்டத்துக்கு வந்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் விஷால் பொதுக்குழுவை முடித்து விட்டு போய் விட்டார். விஷாலை புரட்சி தளபதி என்று நினைத்து இருந்தேன்.

ஆனால் அவர் பயந்து ஓடிவிட்டார். பயந்தவர்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர் இனிமேல் எதைப்பற்றியும் பேச தகுதியும் இல்லை” என்றார்.
Tags:    

Similar News