சினிமா

கமல்ஹாசன், விரைவில் ரசிகர்களுடன் ஆலோசனை

Published On 2017-11-25 13:22 GMT   |   Update On 2017-11-25 13:22 GMT
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகி இருக்கும் நிலையில், விரைவில் தனது ரசிகர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறாராம்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்து இருக்கிறார். அரசியல் பற்றிய தனது கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் ரசிகர்களும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிய ஆர்வமாக இருக்கிறார்கள். புதிய கட்சி பற்றிய அறிவிப்பை மக்களை சந்தித்த பிறகே வெளியிடுவேன் என்று கமல் தெரிவித்து இருக்கிறார். எனவே வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் எந்த முடிவை அறிவித்தாலும் அது பரபரப்பை ஏற்படுத்தும். எனவே அதுகுறித்து கமல் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

தனது நற்பணி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்யவும் திட்டமிட்டுள்ளார். அவர்களின் கருத்தை அறிந்த பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அணுகுமுறை குறித்து தனது முடிவை கமல் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.



கமல் ஏற்கனவே ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். எனவே ஆளும் கட்சி வேட்பாளருக்கு கமல் ஆதரவு கொடுக்க வாய்ப்பு இல்லை.

இது இடைத்தேர்தல் என்பதால் கமலின் செல்வாக்கை இதில் காட்டும் வாய்ப்பு குறைவு. எனவே, தனக்கு பிடித்தமான வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கலாம்.

குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தால் கமல் ஒரு கட்சி சார்ந்தவராகிவிட்டார் என்ற விமர்சனம் வரலாம். கடந்த முறை இந்த தொகுதி தேர்தல் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறி ரத்து செய்யப்பட்டது. எனவே மக்கள் ஜனநாயக முறைப்படி ஓட்டு போட வேண்டும். பணத்தை நம்பி ஏமாறக் கூடாது என்று பொதுவான அறிவிப்பை வெளியிடுவாரா? அவரது நற்பணி மன்றத்தினருக்கு என்ன உத்தரவு பிறப்பிப்பார்? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு விடை காணும் வகையில் விரைவில் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதில் எடுக்கும் முடிவின்படி கமல் தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. கமல் வெளியிடும் அறிவிப்பை அவரது மன்றத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Tags:    

Similar News