சினிமா

அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாகத் தோன்றுகிறது - விஜய் ஆண்டனி

Published On 2017-11-23 10:35 GMT   |   Update On 2017-11-23 10:35 GMT
அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாகத் தோன்றுகிறது என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.
நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமாரின் தற்கொலை திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அசோக் குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக கூறப்படும் அன்புச் செழியனுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அசோக் குமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது,

“நடிகர் திரு.சசிக்குமார் அவர்கள், மிகவும் சிறந்த இயக்குநர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் திரு. அசோக்குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். திரு.அசோக் குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும்.



நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் திரு.அன்புச்செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாக திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் நடந்து கொள்கிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது.

திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கி படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்.

திரு. அசோக் குமார் அவர்களின் மரணம் தற்கொலையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்துகொண்ட என் தந்தையால் நானும், என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம், எனக்கு நன்றாகத் தெரியும்.

எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

RIP- திரு அசோக் குமார்”

என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Tags:    

Similar News