சினிமா

அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை

Published On 2017-11-22 07:13 GMT   |   Update On 2017-11-22 07:13 GMT
டைரக்டர் சசிகுமாரின் மைத்துனர் கந்து வட்டிக்கு பலியான சம்பவத்தில் தலைமறைவான சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை கைது செய்ய சென்னை-மதுரையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
‘சுப்பிரமணியபுரம்’ படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகரும், டைரக்டருமான சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சசிகுமார் அதன் மூலம் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். தமிழ் சினிமா வில் முன்னணி கதாநாயகனாகவும் உள்ளார்.

சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து வந்த அசோக்குமார் தயாரிப்பு நிறுவனத்தையும் கவனித்து வந்துள்ளார்.

சசிக்குமாரின் அத்தை மகனான இவர், திரைமறைவில் இருந்தபடியே சசிகுமாரின் சினிமா வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு உடற்பயிற்சி கூடத்தில் பிணமாக தொங்கினார்.



இதுபற்றி தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

அசோக்குமாரின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து 2 பக்க கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியனிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி இருந்தது தெரிய வந்தது. இந்த கடனுக்காக சசிகுமாரும், அசோக்குமாரும் வட்டிக்கு மேல் வட்டி கட்டி வந்துள்ளனர். அதன் பின்னரும் அன்புச்செழியன் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் கடந்த சில மாதங்களாகவே அசோக்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கந்து வட்டி கொடுமை அதிகரிக்கவே அசோக்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் 306 ஐ.பி.சி. (தற்கொலைக்கு தூண்டுதல்) சட்டப்பிரிவில் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தெடர்ந்து அவரை பிடிப்பதற்காக தி.நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

போலீஸ் தேடுவதை அறிந்ததும் அன்புச்செழியன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் அன்புச் செழியனை சென்னை மற்றும் மதுரையில் தீவிரமாக தேடி வருகிறார்கள்.



அன்புச்செழியனின் சொந்த ஊர் மதுரை ஆகும். அவர் மதுரைக்கு தப்பி சென்றாரா? இல்லை சென்னையில் பதுங்கி இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

இதனால் அன்புச்செழியனின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

அசோக்குமார் தற்கொலை செய்த விவகாரம் நேற்று மாலையிலேயே தெரிய வந்தது. இதன் பின்னரே அன்புச்செழியன் தலைமறைவாகி உள்ளார். இதனால் அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கடைசியாக அவருக்கு வந்த போன் அழைப்பு, அவர் யாரிடம் பேசி இருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை திரட்டி உள்ளனர். இதனை வைத்து அன்புச்செழியன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அசோக்குமார் தற்கொலை குறித்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த சசிகுமாருடன், டைரக்டர்கள் அமீர், சமுத்திரக்கனி, கரு. பழனியப்பன், சரவணன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் சென்றிருந்தனர்.

இதனால் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பர பரப்பு நிலவியது.

இவர்கள் அனைவரும் அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அப்போது சசிகுமார் கண்ணீர் விட்டு அழுதார். மற்ற இயக்குனர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். சசிகுமார் கூறும்போது, “அசோக்குமார் எனக்கு நிழல் போல இருந்தவன் என்று குறிப்பிட்டார்.

கந்துவட்டி கொடுமைக்கு கடந்த 2003-ம் ஆண்டு சினிமா பட அதிபர் ஜீ.வி. தற்கொலை செய்து கொண்டார்.

இதன் பின்னர் பலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளர் அசோக்குமாரை கந்து வட்டி காவு வாங்கியுள்ளது.

இவரை போல கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் பலர் வெளியில் சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டுள்ளனர். அவர்களும் இதுபோன்று விபரீத முடிவுகளை எடுக்கும் முன்னர் தமிழ் திரை உலகினர் விழித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கந்து வட்டி கும்பலின் பிடியில் இருந்து தமிழ் சினிமா மீட்கப்படும்.
Tags:    

Similar News