சினிமா

நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி

Published On 2017-11-21 11:21 GMT   |   Update On 2017-11-21 11:21 GMT
நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10–ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அலுவா கிளை சிறையில் திலீப் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஏறக்குறைய 90 நாட்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளிநாடு செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததால், திலீப்பின் பாஸ்போர்ட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலீப்புக்கு எதிராக வரும் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், இம்மாத இறுதியில் துபாயில் உள்ள தனது ஓட்டல் திறப்பு விழாவில் பங்கேற்க வசதியாக வெளிநாடு செல்ல அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், நான்கு நாட்கள் வெளிநாடு சென்று வர திலீப்பிற்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அங்கமாலி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், திலீப்பின் பாஸ்போர்ட்டை 6 நாட்களுக்கு விடுவிக்க வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News