சினிமா

சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது புகார்

Published On 2017-10-30 05:06 GMT   |   Update On 2017-10-30 05:06 GMT
நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கி புதுச்சேரியில் போலி முகவரியில் பதிவு செய்து ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
‘மைனா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அமலாபால். ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் டைரக்டர் விஜய்க்கும் திருமணம் நடந்து விவாகரத்தாகி விட்டது. தற்போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘திருட்டுப்பயலே இரண்டாம் பாகம்’ உள்ளிட்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் உள்ள ஒரு கார் விற்பனை நிறுவனத்தில் வெளிநாட்டு சொகுசு காரான ‘பென்ஸ் எஸ் கிளாஸ்’ ரக காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1 கோடியே 12 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த சொகுசு காரை ஆகஸ்டு 9-ந்தேதி புதுச்சேரி திலாஸ்பேட் பகுதியில் உள்ள செயிண்ட் ரிரசா தெருவில் உள்ள ஒரு வீட்டு முகவரியை கொடுத்து அங்குள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். பின்னர் காரை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார்.

கேரளாவில் பட விழாக்களுக்கும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும் இந்த காரில்தான் சென்று வருகிறார். இந்தநிலையில் புதுச்சேரியில் காரை பதிவு செய்ய அமலாபால் கொடுத்தது போலி முகவரி என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த முகவரியில் பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர் தங்கி இருக்கிறார். அவர் தனக்கு அமலாபால் யார்? என்றே தெரியாது என்று கூறியிருக்கிறார்.

புதுச்சேரியில் பதிவு செய்யப்படும் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பு உள்ள கார்களுக்கு ரூ.55 ஆயிரம் மட்டுமே சாலை வரியாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் காரின் மதிப்பில் 20 சதவீதம் சாலை வரியாக செலுத்த வேண்டும்.

வேறு மாநிலத்தில் சொகுசு கார்களை பதிவு செய்து விட்டு கேரளாவில் ஓட்டினாலும் அந்த கார்களையும் கேரளாவில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று வாகன சட்டம் உள்ளது. அமலாபால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து தனது காரை பதிவு செய்து கேரளாவில் பயன்படுத்தியதாகவும் இதன்மூலம் அவர் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News