சினிமா

சர்ச்சை காட்சிகளுடன் படமாகும் ‘இந்தியன்-2’

Published On 2017-10-27 07:58 GMT   |   Update On 2017-10-27 07:58 GMT
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படம் சர்ச்சை காட்சிகளுடன் நடப்பு அரசியலை பிரதிபலிக்கும் படமாக தயாராவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டில் வெளியாகி பரபரப்பாக ஓடிய படம் இந்தியன். ரூ.8 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.30 கோடி வசூல் குவித்தது. கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து இருந்தார். லஞ்சம், ஊழலை மையமாக வைத்து ஷங்கர் இயக்கி இருந்தார். இதில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வர்ம கலையால் அடித்து வீழ்த்தும் கமல்ஹாசனின் வயதான கதாபாத்திரம் பேசப்பட்டது.

தற்போது கமல்ஹாசன் நடிக்க இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்து உள்ளார். நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. நடப்பு அரசியலை பிரதிபலிக்கும் கதையம்சத்தில் முழு நீள அரசியல் படமாக இது தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க இரண்டாக உடைந்து தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டு குதிரை பேரம் நடந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. கமல்ஹாசனும் இதனை விமர்சித்து இருந்தார். பின்னர் இரண்டு அணிகளும் இணைந்து புதிதாக இன்னொரு அணி உருவானது.



அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டனர். சின்னம் முடக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு பிரச்சினைகள் எழுந்தன. மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது. ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்தியது. கமல்ஹாசன் இந்த பிரச்சினைகளில் தொடர்ந்து தனது கருத்தை டுவிட்டரில் வெளியிட்டு வந்தார். இந்த பரபரப்பான நிகழ்வுகளில் சிலவற்றை இந்தியன்-2 படத்தில் காட்சிப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி வரும் சூழ்நிலையில் இந்தியன்-2 படத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பது கமல்ஹாசன் திட்டமாக இருக்கிறது. எனவே ஊழல், வறுமை ஒழிப்பை முன்னிறுத்தும் அழுத்தமான அரசியல் கதையாக இந்த படம் இருக்க வேண்டும் என்று ஷங்கரிடம் அவர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் பஞ்ச் வசனங்களும் இடம்பெறுகின்றன. கடந்த வாரம் வெளியான விஜய்யின் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட சர்ச்சை காட்சிகள் இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. இதுபோன்று இன்னொரு சர்ச்சை அரசியல் படமாக இந்தியன்-2 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News