சினிமா

விஷாலை மிரட்ட சோதனை நடத்துவதா?: கருணாஸ் கண்டனம்

Published On 2017-10-24 07:22 GMT   |   Update On 2017-10-24 07:22 GMT
‘மெர்சல்’ பட பிரச்சினையில் விஷாலை மிரட்ட வருமான வரி சோதனை நடத்துவதா? என்று நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்த வருமான வரி சோதனை குறித்து, நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ் அளித்த பேட்டி வருமாறு:-

நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம். கருத்து உரிமை, பேச்சு உரிமை அனைவருக்கும் இருக்கிறது. திரைப்படங்களில் விமர்சனங்கள் வருவது சகஜமான ஒன்று. கடந்த காலங்களில் பல தலைவர்களை சினிமாவில் விமர்சித்து உள்ளனர். கருணாநிதி மாதிரி நடிகர் சோ கண்ணாடி அணிந்து விமர்சித்ததும் உண்டு.

நடிகர் விஜயகாந்த் பேசாத அரசியல் வசனம் இல்லை. ஒவ்வொரு படத்திலும் அவர் அரசியல் விமர்சனங்கள் செய்திருக்கிறார். ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தணிக்கை செய்யப்பட்ட படத்தை மறு தணிக்கை செய்யவேண்டும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. எனவே தான் நடிகர் விஷால் ‘மெர்சல்’ படத்தை எதிர்ப்பதை கண்டித்தார்.



தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் விஷால் பதவி வகிக்கிறார். நானும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். ஜி.எஸ்.டி. வரியை விமர்சித்ததற்காக ‘மெர்சல்’ படத்துக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் பேசியதற்கு தான், விஷால் பதில் அளித்தார். ‘மெர்சல்’ படத்தை மறு தணிக்கை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

இதற்காக அவரது அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை. பயமுறுத்தும் செயல். மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொன்னால், இதுபோல் சோதனைகள் நடக்கும் என்று மிரட்டுவதாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு கருணாஸ் கூறினார்.
Tags:    

Similar News