சினிமா

கடத்தப்பட்ட நடிகைக்கு அடைக்கலம்: ரம்யா நம்பீசனிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2017-08-18 04:57 GMT   |   Update On 2017-08-18 04:57 GMT
கடத்தப்பட்ட நடிகைக்கு அடைக்கலம் கொடுத்ததால், அந்த கும்பல் குறித்த தகவல் ஏதும் நடிகை ரம்யா நம்பீசனுக்கு தெரிந்திருகக்லாம் என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், ரவுடி பல்சர் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து போலீசார் பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தபோது அந்த காட்சியை படம் பிடித்த செல்போனை போலீசாரால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை.

இந்த வழக்கில் அந்த செல்போன் முக்கிய சாட்சியம் என்பதால் அதை பறிமுதல் செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த வழக்கில் ஏற்கனவே திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியர், 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவன், அவரது தாயார் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள், கேரள அரசியல்வாதிகள் என்று போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்து உள்ளவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.



இந்த நிலையில் பிரபல நடிகை ரம்யா நம்பீசனும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்பிற்கு அவரை வரவழைத்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ரம்யா நம்பீசனும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகையும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். மேலும் சம்பவம் நடந்த அன்று சினிமா படப்பிடிப்பு முடிந்து ரம்யா நம்பீசன் வீட்டிற்குதான் அந்த நடிகை காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சில நாட்கள் ரம்யா நம்பீசன் வீட்டில்தான் அந்த நடிகை தங்கினார். எனவே அப்போது அந்த நடிகை தன்னை கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் பற்றிய தகவல்களை ரம்யா நம்பீசனிடம் தெரிவித்திருப்பார் என்ற கோணத்தில் ரம்யா நம்பீசனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

2 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இதற்கிடையில் அங்கமாலி கோர்ட்டில் ரவுடி பல்சர் சுனிலை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது காக்கநாடு ஜெயிலில் தன்னை சிலர் தாக்கியதாக பல்சர் சுனில் நீதிபதியிடம் புகார் கூறினார். இதை தொடர்ந்து அவரை விய்யூர் ஜெயிலுக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.

நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் அந்த நடிகைக்கு எதிராக பி.சி. ஜார்ஜ் எம்.எல்.ஏ., ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த நடிகை கேரள முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் பி.சி. ஜார்ஜ் எம்.எல்.ஏ. கூறிய கருத்துகள் பற்றி சட்டசபை பேரவை நெறிமுறை கமிட்டியின் ஆய்வுக்கு அனுப்ப கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கை கிடைத்த பிறகு எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News