சினிமா

‘காலா’ படத்துக்கு தடை: ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல்

Published On 2017-07-20 10:04 GMT   |   Update On 2017-07-20 10:04 GMT
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ‘காலா’ படத்துக்கு தடை கோரிய வழக்கில் ரஜினிகாந்த் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான, தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவும் செய்துள்ளேன். ‘கரிகாலன் என்ற தலைப்பு’ மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது ஆகும்.

என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை தொடங்கி உள்ளனர்.

எனவே, என்னுடைய கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இந்த மனு 4-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் தனித்தனியாக பதில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், மனுதாரர் சுமத்தும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தையும் மறுக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News