சினிமா

ஏ.ஆர்.ரகுமானின் மொழியே இசை தான்: தனுஷ்

Published On 2017-07-17 07:56 GMT   |   Update On 2017-07-17 07:56 GMT
லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து சினிமா உலகில் உள்ள பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷும் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார்கள்.

டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்து பதிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியதாக கூறப்படுகிறது.

இந்த சர்சைக்கு நடிகர், நடிகைகள், பாடகர், பாடகிகள் என பலரும் ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் தனுஷும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனுஷ் கூறியிருப்பதாவது,



"ஏ.ஆர்.ரகுமானுக்கு மொழி என்பதே கிடையாது. அவரது மொழி இசை மட்டுமே, வேறு எதுவுமில்லை. ரகுமான் எப்போதும் ரகுமானே, ஜெய்ஹோ" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகை குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

லண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும் போது, “ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் இசைக்குழு சிறப்பான பாடல்களை தர முயன்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நேர்மையாகவே நடந்து கொண்டோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News