சினிமா

பாவனா கடத்தல் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்: திலீப் அதிரடி

Published On 2017-06-27 06:12 GMT   |   Update On 2017-06-27 06:12 GMT
நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயாராக இருப்பதாக நடிகர் திலீப் கூறியுள்ளார்.
ரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பான சம்பவத்தில் பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 12-ந்தேதி பல்சர் சுனில், பிரபல மலையாள நடிகரான திலீபுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்ததாகவும், அந்த கடிதத்தில், ‘உங்களை நான் இதுவரை கைவிடவில்லை. ஆனால் பேசியபடி எனக்கு தரவேண்டிய பணத்தை உடனடியாக தரவேண்டும். மொத்தமாக தரமுடியாவிட்டாலும், 5 தவணைகளாக எனக்கு தந்துவிட வேண்டும். இந்த கடிதத்தை கொண்டுவரும் எனது நண்பர் விஷ்ணுவுக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு கிடையாது. காலம்தாழ்த்தாமல் பேசிய தொகையை உடனடியாக தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

எனவே நடிகை பாவனா கடத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



எனவே, நடிகர் திலீப்பிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அத்துடன், இந்த வழக்கில் திலீப்பை சிக்கவைக்கும் நோக்குடன் பல்சர் சுனில் செயல்பட்டு வருகிறாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நடிகர் திலீப் முகநூலில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக எனக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மலையாள திரைப்பட உலகில் எனக்கு உள்ள மரியாதையை கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். என் மீது ரசிகர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், விரைவில் வெளியாக உள்ள ‘ராமலீலா’ என்ற திரைப்படத்தை வெளிவராமல் தடுக்கவும் நடைபெற்றுவரும் கூட்டு சதியாகவே இதை நான் பார்க்கிறேன்.



கடத்தல் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சையால் கடந்த சில மாதங்களாக நான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனில் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம்கார்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தமிழக முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த சிம்கார்டை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News