சினிமா

அரசியல் பிரவேசம் குறித்து பிறந்த நாளில் அறிவிக்கிறார் ரஜினி

Published On 2017-06-16 12:13 GMT   |   Update On 2017-06-16 12:13 GMT
அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி தன்னுடைய பிறந்தநாளில் அறிவிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. தமிழகத்தை வழிநடத்த சக்தி வாய்ந்த தலைவர் ஒருவர் தேவை என்ற மனநிலை மக்கள் மனதில் எதிரொலித்தபடி உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசியல் கள வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசியல் களத்தில் ரஜினி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் கொடுத்த வாய்ஸ் எடுபட்டது.

ஆனால் அவர் அரசியலுக்கு வரவில்லை. பாபாஜி வாழும் இமயமலைப் பகுதிக்கு செல்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார். அவரிடம் ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து வந்ததால் அவர் இனி அரசியலுக்கு வரமாட்டார் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து பேசினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற புதிய எதிர்பார்ப்பு மீண்டும் உருவானது.



ரசிகர்கள் மத்தியில் அவர் பேசும்போது, “போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். தயாராக இருங்கள்” என்று கூறினார். அவர் போர் என்று கூறியதை தேர்தலாக அரசியல் நிபுணர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் கருதுகிறார்கள். எனவே ரஜினி உறுதியாக அரசியலுக்கு வருவார் என்று பேசப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் வரவேற்றுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துகணிப்புகளும் ரஜினிக்கு சாதகமாக உள்ளன. ஆனால் ரஜினியிடம் இருந்து இதுவரை அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ரசிகர்களுடன் முதல்கட்ட சந்திப்பை முடித்த ரஜினி தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். அடுத்த மாதம் (ஜூலை) அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்பிறகே அவர் அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளான டிசம்பர் மாதம் 12-ந்தேதி அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார் என்று தெரியவந்துள்ளது. ரஜினிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இதை உறுதிபடுத்தி உள்ளார். ரஜினி அரசியலுக்கு வரும் முடிவில் உள்ளார். தொண்டர்களுடன் கலந்து பேசி விட்டு அவர் பிரமாண்ட கூட்டத்தை கூட்டி தனது முடிவை வெளியிட வியூகம் வகுத்துள்ளார்.

பிறந்த நாள் அன்று புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் தன் ரசிகர்களிடம் இரட்டிப்பு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்த முடியும் என்று ரஜினி நினைக்கிறார். இந்த அறிவிப்பு வெளியாகும். அடுத்த சில மாதங்களில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ மற்றும் ‘காலா’ படங்கள் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News