சினிமா

பட அதிபர் மதன் மீண்டும் கைது

Published On 2017-05-24 03:32 GMT   |   Update On 2017-05-24 03:32 GMT
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்க பிரிவினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து பட அதிபர் மதனை மீண்டும் கைது செய்தனர்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக 133 மாணவ-மாணவிகளிடம் ரூ.90 கோடி மோசடி செய்ததாக பட அதிபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகிவிட்ட அவரை இந்தியா முழுவதும் தேடினார்கள். இறுதியில் திருப்பூரில் வைத்து மதன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக மதன் மீது அமலாக்க பிரிவினரும் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். மதனுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து, பலமுறை அவரிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.



நேற்று மதன் சென்னையில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கைது செய்யப்படலாம் என்று நேற்று மாலையில் இருந்து தகவல் வெளியானது. ஆனால் அமலாக்க பிரிவு அதிகாரிகள் மதன் கைதானதை உறுதி செய்யவில்லை.

நேற்று இரவு 8 மணிக்கு மேல் மதன் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. கைதான மதன் நேற்று இரவு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதன் மறுபடியும் கைது செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவக்கல்லூரி சீட் மோசடி வழக்கில் மீண்டும் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் மேலும் சிலர் மீதும் கைது நடவடிக்கை பாயுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News