சினிமா

31 வயதாகியும் கன்னிப் பையனாக இருந்தால்தான் ‘பிரேமம்’ படம்போல் எடுக்கமுடியும்: அல்போன்ஸ் புத்திரன்

Published On 2017-05-23 11:36 GMT   |   Update On 2017-05-23 11:36 GMT
பிரேமம் படத்தை ரீமேக் செய்வதானால் 31 வயதாகியும் கன்னிப் பையனாக இருக்கும் ஒருவரால்தான் அப்படத்தை எடுக்கமுடியும் என்று அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘நேரம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற படத்தை இயக்கி பெரிய அளவில் வெற்றியடைந்தார். இப்படம் மலையாளத்தில் மட்டுமில்லாது பல்வேறு மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டு போட்டு வருகின்றனர்.



கடந்த வருடம் ‘பிரேமம்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட்டிருந்தனர். ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. இந்நிலையில், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அல்போன்ஸ் புத்திரன் சில முன்னணி நிறுவனங்கள் அணுகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது,

‘பிரேமம்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக 5 முன்னணி நிறுவனங்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தின. அதில் 2 நிறுவனங்கள் என்னைவிட திறமைவாய்ந்த இயக்குனர்களை வைத்து அப்படத்தை இந்தியில் எடுக்கப்போவதாக தெரிவித்தனர். அப்படி எடுத்தால் ‘பிரேமம்’ ஒரிஜினலைவிட அப்படம் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

அவர்களிடம் நான் ஒன்றை மட்டும் கூறினேன். ‘பிரேமம்’ படம் இவ்வளவு தனித்துவமாக இருக்கக் காரணம் அப்படத்தை எடுக்கும்போது எனக்கு 31 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் கன்னிப் பையனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட ஒருவரால் மட்டுமே என்னைவிட ‘பிரேமம்’ படத்தைவிட நன்றாக எடுக்க முடியும். திறமைவாய்ந்த ஜாம்பவான்களை வைத்து ‘பிரேமம்’ படத்தைவிட பிரம்மாண்டமாகவும், நிறைவாகவும் எடுக்க நினைக்கலாம்.

ஆனால், பிரேமம் படத்தின் வெற்றியே அப்படத்தில் நிறைவான காட்சிகள் இல்லாதததுதான். அதனால், யாராவது இப்படத்தை ரீமேக் செய்வதோ? அல்லது மொழிமாற்றம் செய்வதாகவோ இருந்தால் அவர்கள் கண்டிப்பாக நிறைவான காட்சிகள் எடுப்பதை தவிருங்கள் என்று தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News