சினிமா

ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-05-22 05:14 GMT   |   Update On 2017-05-22 05:14 GMT
தமிழ் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். கடந்த 15-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 19-ந் தேதி நிறைவடைந்தது.

இந்த சந்திப்பின் போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசினார். அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன். அரசியலை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் சேர்க்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

கடைசி நாள் சந்திப்பின் போது, அரசியல் அமைப்பு (சிஸ்டம்) கெட்டு போய்விட்டதாகவும், போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்றும் ரஜினி பேசினார். இதன் மூலம் தேர்தல் நேரத்தில் அவர் அரசியலில் குதிப்பது உறுதியாகி உள்ளது.


ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்துக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை வெளி மாநிலத்தவர்கள் ஆண்டது போதும். இனி நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம். ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி தலைமையில் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் தேனாம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வழியாக செல்லும் சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இதன் காரணமாக போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News