சினிமா

முதல்வருடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்த விஷால்

Published On 2017-05-13 06:15 GMT   |   Update On 2017-05-13 06:15 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் விளக்கமளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான நடிகர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். பின்னர் வெளியில் வந்த நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

படப்பிடிப்பின் போதும், திரைப்படங்களை வெளியிடும் போதும் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது உள்ளது. இதனால் படம் வெளியாவதில் தாமதமும், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் ஜி.எஸ்.டி. மசோதா அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் திரைப்படத்துறைக்கும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபற்றியும் முதல்- அமைச்சரிடம் விரிவாக விவாதித்தோம். புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலேயே இணையதளங்களில் அந்த படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு விடுகிறார்கள்.



இதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டோம்.

சிறிய அளவிலான பட்ஜெட் படங்கள் தயாரிப்பதற்கு அரசால் வழங்கப்படும் மானியத்தொகை சமீபகாலமாக வழங்கப்படாமல் உள்ளது. அதை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தமிழக அரசு திரைப்பட விருதை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட முதல்- அமைச்சர் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News