செய்திகள்

சேலத்தில் இன்று அதிகாலை வாகன சோதனை - வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல்

Published On 2019-05-18 06:36 GMT   |   Update On 2019-05-18 06:36 GMT
சேலத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (19-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்றிரவு பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக சேலம் சந்தைப்பேட்டை பகுதியில் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய ரோந்து போலீசார் இன்று அதிகாலை 2 மணியளவில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சொகுசுகாரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காரில் கட்டு கட்டாக ரூ.49 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் இருந்த செவ்வாய்ப்பேட்டை தெய்வநாயகம் தெருவவை சேர்ந்த சித்தாராம் (வயது 40) என்பவரிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் சேலம் வடக்கு தொகுதி தேர்தல் உதவி அதிகாரியான முத்திரை தாள் விற்பனை தாசில்தார் மாதேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து வந்த தாசில்தார் மாதேஸ்வரன் காரில் இருந்த பணம் குறித்து வியாபாரி சித்தாராமிடம் விசாரணை நடத்தினர்.செவ்வாய்ப்பேட்டையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளதாகவும், சோப்புத்தூள், காப்பித்தூள் மற்றும் சிகெரட் மொத்த வியாபாரம் செய்து வருவதால் அதற்கான பொருட்களை கொள்முதல் செய்ய ஆந்திராவுக்கு செல்வதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.49 லட்சத்தையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை சேலம் வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியும், சேலம் ஆர்.டி.ஓ.வுமான செழியனிடம் இன்று காலை ஒப்படைத்தனர். அவர் அந்த பணத்தை சேலம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி சித்தாராம் பணத்தை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறினார்.

Tags:    

Similar News