செய்திகள்

சென்னையில் 6-ந் தேதி மெட்ரோ ரெயில் விழிப்புணர்வு மராத்தான் ஓட்ட பந்தயம்

Published On 2019-01-04 05:43 GMT   |   Update On 2019-01-04 05:43 GMT
சென்னையில் பொது மக்களிடையே மெட்ரோ ரெயில் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 6-ந் தேதி மராத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. இதில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். #Marathon

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

மேலும் டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

இதையொட்டி மெட்ரோ ரெயில் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாளை மறுநாள் (6-ந் தேதி) சென்னை மராத்தான் - 2019 ஒட்டப் பந்தயம் நடை பெறுகிறது. மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 400 மீட்டர் தொலைவில் இருந்து மராத்தான் ஓட்டம் தொடங்குகிறது.

42 கி.மீட்டர், 32 கி.மீட்டர், 21 கிலோ மீட்டர், 10 கி.மீட்டர் என 4 பிரிவுகளாக இந்த மராத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் நந்தம்பாக்கம் டிரேடு சென்டர், ஹால் 1-ல் இன்று அல்லது நாளை (5-ந் தேதி)-க்குள் பெயர் விவரங்களை பதிவு செய்து கொண்டு அனுமதி சீட்டு பெற்றுச் கொள்ளலாம்.

மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்போர்களுக்கு இலவச மெட்ரோ பயண சீட் வழங்கப்படுகிறது. மராத்தான் ஓட்டத்தையொட்டி 6-ந் தேதி அதிகாலை 4 மணிமுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுகிறது. #Marathon

Tags:    

Similar News