செய்திகள்

2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே அரசின் லட்சியம் - பிரதமர் மோடி தகவல்

Published On 2019-06-12 01:12 GMT   |   Update On 2019-06-12 01:12 GMT
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே பா.ஜனதா அரசின் லட்சியம் என்று ‘தினத்தந்தி’க்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா கட்சி மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க. வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கிடைத்த மகத்தான வெற்றிக்காக உங்கள் நல்வாழ்த்துகளை பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் வாழ்வில் ஒரு சீரிய மாற்றத்தையும், இந்தியாவை உயர்ந்த வளர்ச்சிப் பாதையிலும் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

130 கோடி இந்திய மக்கள் எங்கள் அரசு மீது தங்களின் அளப்பரிய நம்பிக்கையை காட்டி, எங்களுக்கு முழுத்திறமையோடு பணியாற்ற மேலும் ஒரு வாய்ப்பைக் கொடுத்து ஆசி வழங்கி இருக்கிறார்கள். வலுவான, நிலையான, ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் மக்கள் விரும்பினார்கள்.

ஏற்கனவே ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. இது, நாங்கள் மேம்பாட்டுப் பாதையில் செல்வதற்கு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. நாங்கள் நிறைய செய்யவேண்டிய இருக்கிறது என்பதை உணர்கிறோம். எங்கள் கனவான, அனைவரோடும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம், அனைவரின் நம்பிக்கையையும் பெறுவோம்’ என்பதை உறுதிப்படுத்த பல முனைகளில் பணியாற்றி வருகிறோம்.

2022-ம் ஆண்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளோம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதுதான் எங்கள் முன்னுரிமை. இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடையவும், உலகில் நமது இளைஞர்கள் புதிய தொழில்புரிந்து உயரிய இலக்கை அடையச் செய்வதற்கும் எங்கள் அரசு வேகமாக பணியாற்றுகிறது.

நாங்கள் இன்று எடுக்கும் முயற்சிகளெல்லாம் வளமான எதிர்காலத்துக்கான விதைகள்தான். வளர்ச்சி என்பது மக்கள் இயக்கம். மக்களின் பங்களிப்போடு உயரிய இடத்தை நாடு அடையவும், வலுவான, வளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News