செய்திகள்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் கோர்ட்டில் ஆஜர்

Published On 2019-06-07 09:40 GMT   |   Update On 2019-06-07 09:40 GMT
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் போபால் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் இன்று ஆஜரானார்
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, விலக்களிக்க வேண்டும் என்ற பிரக்யா சிங்கின் கோரிக்கையை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்தது. மேலும் ஜூன் 6-ம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதனிடையே ரத்த அழுத்தம் காரணமாக மே 5-ம் தேதி இரவு பிரக்யா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கோர்ட்டில் ஆஜராவதற்கு ஒருநாள் விலக்கு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் போபால் பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் இன்று ஆஜரானார். 11 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு பிரக்யா சிங் இன்று முதன்முதலாக ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News