செய்திகள்

துபாயில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த வாலிபர்கள் கைது

Published On 2019-05-18 15:35 GMT   |   Update On 2019-05-18 15:35 GMT
துபாயில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் குண்டு வடிவில் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த வாலிபர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

துபாயில் இருந்து கேரளாவிற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் இன்று காலை சுங்க துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கோழிக்கோடுக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.

கடைசியாக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே சுங்கத்துறை அதிகாரிகள் தாங்கள் வைத்திருந்த கருவி மூலம் அவர்களை சோதனை செய்தனர். அவர்களிடம் தங்கம் இருப்பதை கருவி காட்டி கொடுத்தது.

ஆனால் அவர்கள் உடல் முழுவதும் சோதனை செய்தும் தங்கம் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து 2 பேரையும் கழிவறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது அவர்கள் இருவரும் தங்கள் மலத்துவாரத்தில் சிறிய குண்டு வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

ஒவ்வொருவரும் தலா 6 குண்டுகள் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தனர். விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பத்கல் பகுதியை சேர்ந்த முகம்மது இம்ரான் (30), மங்களூரை சேர்ந்த நிஷார் அகமது என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும். கைதான இருவரிடமும் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News