செய்திகள்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்- மாயாவதி மிரட்டல்

Published On 2019-04-30 12:25 GMT   |   Update On 2019-04-30 13:43 GMT
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மிரட்டல் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati
லக்னோ:

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பியான ஜோதிராதித்ய சிந்தியா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லோகேந்திர சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் திடீரென தேர்தலில் இருந்து விலகியதுடன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.

இதனால் காங்கிரஸ் கட்சி மீது மாயாவதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதில் பாஜகவுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. குணா மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் அரசு கட்டாயப்படுத்தி, வாபஸ் பெற வைத்துள்ளது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த சின்னத்தில் தேர்தலை சந்தித்து காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும். அத்துடன், மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.

உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றாலும், பகுஜன் சமாஜ் கட்சி- சமாஜ்வாடி கூட்டணி வெற்றி பெறக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் சாதி மனப்பான்மை, குறுகிய மனப்பான்மை மற்றும் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

குணா தொகுதியில் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Mayawati
Tags:    

Similar News