செய்திகள்

கேரள கன்னியாஸ்திரி வழக்கில் முக்கிய சாட்சி மர்ம மரணம் - விசாரணை கோரி உறவினர்கள் புகார்

Published On 2018-10-22 11:19 GMT   |   Update On 2018-10-22 11:19 GMT
கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியாரின் மரணத்தில் மர்மம் உள்ளதால் விசாரணை நடத்தக்கோரி அவரது குடும்பத்தினர் ஆலப்புழா போலீசில் புகார் அளித்துள்ளனர். #FatherKuriakose #FatherKuriakosedeath #Keralanuncase
சண்டிகர்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.  இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.
 
இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலம்,  ஜலந்தர் நகரின் தசுயா பகுதியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் இந்த சந்தேக மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  #FatherKuriakose  #FatherKuriakosedeath #Keralanuncase
Tags:    

Similar News