செய்திகள்

ஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி

Published On 2019-05-21 17:57 GMT   |   Update On 2019-05-21 17:57 GMT
ஊட்டியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. நடப்பாண்டியில் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

மத்திய அரசின் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணையம் சார்பில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாழும் ஆதிவாசி மக்கள் தயாரித்த கைவினை பொருட்கள் விற்பனை கண்காட்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்காட்சியில் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள், பாரம்பரிய உடைகள், ஓவியத்துடன் கூடிய துணிகள், கற்களால் செய்யப்பட்ட டம்ளர்கள், குடுவைகள், மண்பாண்டங்கள், பொம்மைகள், அணிகலன்கள் ஆகியவை விற்பனை செய்ய 70 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மண்டல இயக்குனர் ராமநாதன் கூறியதாவது:-

கோவா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, தமிழ்நாடு ஆகிய இடங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காகவும், அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கைவினை பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆதிவாசிகள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வந்து செல்ல போக்குவரத்து, உணவு போன்ற செலவுகளை மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணையம் செய்து கொடுக் கிறது.

ஆதிவாசி மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இடைத்தரகர்கள் வாங்கி விற்பதால், அவர்களுக்கு உரிய விலை கிடைக்காது. எனவே, மத்திய அரசு ஆதிவாசி மக்களிடம் இருந்து கைவினை பொருட்களை ஆதார விலை வழங்கி பெற்றுக்கொள்கிறது. இந்த பொருட்களை நாடு முழுவதும் உள்ள 140 கடைகளில் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, சென்னை, கோவை, மதுரை உள்பட 8 இடங்களில் கைவினை பொருட்கள் விற்பனையாகிறது. ரூ.45 கோடிக்கு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரூ.100 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐதராபாத், மும்பை, ஜெய்ப்பூர், டேராடூன், கொல்கத்தா, புவனேஸ்வர், சத்தீஸ்கர், தமிழகம் உள்பட 15 மண்டல அலுவலகங்கள் உள்ளன.

தமிழகத்துக்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கு வருகிறவர்கள் கைவினை பொருட்களை விரும்பி வாங்குகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் கைவினை பொருட்கள் விற்பனை அங்காடி தொடங்கப்பட உள்ளது. இந்த அங்காடி மூலம் நீலகிரியில் வாழும் ஆதிவாசி மக்களின் கைவினை பொருட்கள் உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களின் பொருட்களையும் விற்பனை செய்யலாம். ஆதிவாசிகள் வனப்பகுதியில் இருந்து கொண்டு வரும் காட்டுத்தேன், புளி, கடுக்காய் போன்றவற்றை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் வாங்கு கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News