செய்திகள்

வடபழனி தீ விபத்து விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை திருப்தி இல்லை- ஐகோர்ட்டு கருத்து

Published On 2019-01-03 10:15 GMT   |   Update On 2019-01-03 10:15 GMT
சென்னை வடபழனி கட்டிட தீ விபத்து விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #chennaihighcourt #VadapalaniApartmentfire

சென்னை:

சென்னை, வடபழனியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் கடந்த 2017ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியானார்கள்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தீ விபத்துக்கு உள்ளான கட்டிடத்தை இடிக்கவும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

ஆனாலும் கட்டிடம் இடிக்கப்பட வில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. தீ விபத்துக்குள்ளான சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கை குறித்த அறிக்கையை இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘20 ஆண்டுகளாக சட்டவிரோத கட்டிடத்துக்கு சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த மொத்த தொகையையும், தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையும் திருப்திகரமாக இல்லை. அந்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டை விசாரித்த விசாரணை அதிகாரியின் பெயர் கூட அறிக்கையில் இல்லை’ என்று கூறி நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அன்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜராகத் தேவையில்லை என்றும் கூறினர். #chennaihighcourt #VadapalaniAppartmentfire

Tags:    

Similar News