செய்திகள்

வகுப்பறையில் ஆசிரியை மீது 10-ம் வகுப்பு மாணவன் தாக்குதல் - நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் இடமாற்றம்

Published On 2018-11-30 10:55 GMT   |   Update On 2018-11-30 10:55 GMT
காஞ்சீபுரம் அரசு பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியை மீது 10-ம் வகுப்பு மாணவன் தாக்கிய சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் இடமாற்றம்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அய்யங்கார் குளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

10-ம் வகுப்பில் ஆங்கில ஆசிரியையாக ஹேனா ஜீன் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று அவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு மாணவன் அனுமதியின்றி வகுப்பறையில் இருந்து வெளியே செல்ல முயன்றான். இதனை ஆசிரியை ஹேனா ஜீன் கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் திடீரென ஆசிரியை ஹேனா ஜீனை தாக்கினான்.

பள்ளி ஆசிரியர்கள் இது பற்றி தலைமை ஆசிரியர் பசுபதியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதியை அதிரடியாக இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அவர் காஞ்சீபுரம் அருகே உள்ள முசரவாக்கம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யங்கார் குளம் அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்களுக்கு முன்பு பல்வேறு பிரச்சினை தொடர்பாக 21 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News