லைஃப்ஸ்டைல்

குழந்தையை நடக்க கற்று கொடுப்பது எப்படி?

Published On 2019-05-25 06:03 GMT   |   Update On 2019-05-25 06:03 GMT
ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். குழந்தை நடக்க தொடங்கும் போது இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை நடக்கும் அழகைக் காண உவகையோடு காத்திருப்பது இயல்பே ஆகும். உங்கள் குழந்தை நடக்கக் கற்றுக் கொண்ட பின் அவனது துள்ளல் நடையும், ஓட்டமும் உங்களை மிகவும் பூரிப்பு அடையச் செய்யும்.

1. முதல் முயற்சியாக உங்கள் குழந்தையை எந்த ஒரு பிடிமானமும் அல்லது சாய்மானமும் இல்லாமல் உட்காரச் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்கள் குழந்தையின் முதுகுத் தண்டில் பலம் ஏற்படுவதோடு, குழந்தை நிலையாக இருக்க கற்றுக் கொள்ளும். உடல் சமநிலையைக் குறித்த புரிதல் அவன் மூளையில் மெல்லப் பதியத் தொடங்கும். மேலும் உடம்பில் உள்ள பல தசைகள் பலம் பெற்று,குழந்தை நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூடி வரும்.

2. உங்கள் குழந்தையின் நடக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சற்று தூரத்தில் நின்றபடி ஏதாவது பொருட்களை அசைத்துக் காட்டுங்கள். இல்லாவிடில் அவன் மிகவும் விரும்பி நேசிக்கும் பொருளைச் சற்று தெலைவில் அவன் கவனத்தை ஈர்க்கும் விதமாக வைத்து விடுங்கள். அதை அவனுக்கு எடுத்துக் கொடுக்காமல் அவனே வந்து எடுத்தக் கொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.’எங்கே இதைப் பிடி!எங்கே அதை எடுத்து வா!’என்பது போன்ற உற்சாகமான வாசகங்களைக் கூறுங்கள். இவ்வாறு செய்யும் போது குழந்தைக்கு அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று எதையாவது பிடித்துக் கொண்டபடியே அந்தப் பொருளை நோக்கி நடக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகும்.

3. உங்கள் குழந்தைக்குப் பிடிமானம் கொண்ட பாரம்பரிய நடை வண்டியை வாங்கிக் கொடுங்கள். அதை விடச் சிறந்த நடைப்பயிற்சி சாதனம் உலகில் வேறு இல்லை. அதைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ஆர்வத்தைக் குழந்தைக்கு ஏற்படச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் போது அவனே யாருடைய உதவியும் இன்றி நடக்கத் தொடங்குவான்

4. உங்கள் குழந்தை நடக்கத் தொடங்கும் போது அவனை வெறும் காலில் நடக்கத் தூண்டுங்கள். காலணிகள் போன்று எதுவும் அணியாமல் நடப்பது நல்லது. பாதங்களை மறைக்கும் காலணிகளை அணிவதால், குழந்தைக்கு தன் பாதங்களின் இயக்க நிலைகளைக் கவனிக்கும் வாய்ப்பு அற்றுப் போகும். குழந்தைகள் கண்களின் வழியே விசயங்களைக் கவனித்து கற்றுக் கொள்கிறார்கள். அதற்கு நாம் தடை விதிக்கக் கூடாது. மேலும் வெறும் கால்களோடு நடக்கும் போது, அவனது பாதங்களுக்கு பூமியோடு நல்ல பிடிமானம் ஏற்படுத்துவதோடு சிறப்பான முறையில் நடை பழகும் சூழல் அதிகரிக்கும். குழந்தையின் பாதங்கள் பூமியில் தொடர்பு கொள்ளும்போது உடலுக்குச் சரியான சமநிலை நூறு சதவீதம் கிட்டும். கூடுதலாகக் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும் உடல் முழுவதும் இருக்கும் தசைகள் வேலை செய்யத் தொடங்கும்.



5. முழுமையாக உங்கள் குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சி தராமல், அவன் பின் நின்று கொண்டு தேவைப் படும் போது மட்டுமே அவனுக்கு உதவி செய்யுங்கள். இப்படிச் செய்யும் போது அவன் சமநிலையைப் பெற முயற்சி செய்வான்.நீங்கள் அருகில் இருப்பது அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.தற்சார்பு நிலைக் குறித்த புரிதல் குழந்தைக்கு மேலோங்கும்.

6. உங்கள் குழந்தைக்கு நடக்கக் கற்றுக் கொடுக்கும் போது வீட்டில் ஆங்காங்கே இருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் பொருட்களை கைகளுக்கு எட்டாத் தூரத்தில் வைப்பது நல்லது. கூர்மையான பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போன்றவைகளை உயரமான இடத்தில் மாற்றி வைக்கலாம். பெற்றோர்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையோடு இருப்பது பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் தவிர்க்கும்.

7. பாதுகாப்பான மற்றும் உங்கள் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதாலும் உங்கள் குழந்தை வேகமாக நடக்கத் தொடங்குவான். குழந்தைகள் பொதுவாகவே நாய்க் குட்டி, ஆடு, கோழி போன்ற செல்லப் பிராணிகளிடம் அன்போடு பழகுவார்கள். நீங்கள் வீட்டில் எதையாவது ஒன்றை வளர்க்க முனையும் போது குழந்தை அதோடு ஆர்வத்தோடு பழகத் தொடங்கி, பின் விளையாடத் தொடங்குவான். இதனால் அவன் வேகமாகவும் நடக்கத் தொடங்குவான்

8. இது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் குழந்தையின் எலும்புகள் மெல்லியதாகவும் பலம் குறைந்தும் இருக்கும். அவன் திடமாக நடக்க அதிக சக்தி தேவை. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்குப் போதிய சத்தான உணவைத் தர வேண்டும். அப்படி செய்வதால் அவன் அதிக சக்தி மற்றும் பலம் பெற்று சுறுசுறுப்பாகவும் திடமாகவும் அதிக நேரம் சோர்வடையாமலும் நடப்பான். ஒரு சில குழந்தைகள் நடைபழக தாமதம் ஏற்பட இதுவே மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

பெற்றோர்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து விசயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
Tags:    

Similar News