ஆன்மிகம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

Published On 2019-05-22 04:15 GMT   |   Update On 2019-05-22 04:15 GMT
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும், திருநீற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூலநட்சத்திர நாளன்று அவதரித்தார். சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த நாளை திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொண்டாப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலசந்தி பூஜைக்குபின் காலை 9 மணியளவில் முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும், தாமரை மலர்களால் அர்ச்சனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள் தேவாரப்பாடல்களை பாடிய பின்னர் திருஞானசம்பந்தர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சப்பரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். சிவன், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் பொற்கின்னத்தில் ஞானப்பாலை திருஞானசம்பந்தருக்கு ஊட்டினார். மேலும் திருஞானசம்பந்தர், சிவன், பார்வதிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திகேயன், குமரகுரு மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து, அரிமா சுப்புராஜ் உள்பட முக்கிய பிரமுர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News