ஆன்மிகம்
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருடசேவை விழா நடந்தபோது எடுத்த படம்.

வரதராஜபெருமாள் கோவில் கருடசேவை விழா

Published On 2019-05-20 05:53 GMT   |   Update On 2019-05-20 05:53 GMT
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் கருடசேவை விழா நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வரதராஜபெருமாளையும், அங்குள்ள தங்க பல்லி, வெள்ளி பல்லி மற்றும் கீழ்தளத்தில் பெருந்தேவி தாயாரையும், சக்கரத்தாழ்வாரையும் மனமுருகி தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய விழாவான கருடசேவை விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. கோவிலில் இருந்து வரதராஜபெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருடவாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்டினர். அங்கு திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். அதிகாலை 5 மணிக்கு கோபுர வாசலில் வந்தபோது, வானத்தில் கருடன் சுற்றி சுற்றி வட்டமிட்டு பக்தர்களை நெகிழ செய்தது.

பின்னர் சாமி கருட வாகனத்தில் டி.கே.நம்பி தெரு, விளக்கடி கோவில் தெரு, ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு வழியாக பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் பெருமாளை மனமுருகி வழிபட்டனர்.

பின்னர் அங்கு இருந்து புத்தேரி தெரு, வழியாக கச்சபேஸ்வரர் கோவில் அருகே சென்றது. அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பெருமாளை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து நாட்டு சர்க்கரையுடன் கற்பூர தீபாராதனை காட்டினர்.

காஞ்சி சங்கரமடம் வந்தபிறகு கங்கைகொண்டான் மண்டபத்தில் இருந்து செங்கழுநீரோடை வீதி வழியாக பூக்கடை சத்திரம், 4 ராஜ வீதிகள் வழியாக மூங்கில் மண்டபம் வந்தடைந்தது. மூங்கில் மண்டபத்தில் இருந்து காந்திரோடு வழியாக பெருமாள் கருட வாகனத்தில் கோவிலை சென்றடைந்தார்.

கருடசேவை திருவிழாவையொட்டி நேற்று காலை மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், முருககேசன், குமரன், செந்தில்குமார் உள்பட திரளானோர் விழாவில் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் தரிசித்தனர்.

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் தியாகராஜன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News