ஆன்மிகம்

அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

Published On 2019-05-18 03:34 GMT   |   Update On 2019-05-18 03:34 GMT
தொட்டியம் அனலாடீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரில் மிகவும் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது பிரம்மன் வளர்த்த யாககுண்டத்தில் சிவபெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால் இங்குள்ள சிவனுக்கு அனலாடீஸ்வரர் என்று பெயர்.

இந்த கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. மேலும் இந்த கோவிலின் தேர் பழுதடைந்ததால் கடந்த 18 ஆண்டுகளாக இந்த கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற வில்லை. இந்த நிலையில் இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அப்போது பல லட்சம் ரூபாய் செலவில் புதியதாக தேர் தயார் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் தினமும் காலை, மாலை ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் புஷ்பரதத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து சோமாஸ்கந்தர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

தெற்குரத வீதி, பவளக்கடைவீதி, வடக்குரத வீதி வழியாக சென்று 10.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பின்னர் இரவு தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) நடராஜர் தரிசனம், விசாக நட்சத்திர தீர்த்தவாரி, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முத்துபல்லக்கில் வீதியுலா, விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News