ஆன்மிகம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப்பெருவிழா தொடங்கியது

Published On 2019-05-10 08:05 GMT   |   Update On 2019-05-10 08:05 GMT
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் 1500 ஆண்டுகள் பழமையான, புகழ் பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி காலை 6 மணிக்கு பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்பிறகு யடா ஸ்தானத்தில் இருந்து பஞ்சமூர்த்தி சாமிகள் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தனர். அங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதன்பிறகு பஞ்சமூர்த்திகள் வெளிமண்டபத்தில் உள்ள கொடிமரத்தை வந்தடைந்தனர். அங்கு வேதபாராயணம் முழங்க 36 அடி உயர கொடி மரத்தில் ரிஷபக்கொடியை நாகராஜ் குருக்கள் ஏற்றினார். அப்போது பக்தர்கள், “பாடலீஸ்வரா, பரமேஸ்வரா” என்ற பக்தி கோஷங்களை முழங்கினார்கள். இதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. இரவில் இந்திரவிமானத்தில் சாமி வீதி உலா நடந்தது.

வைகாசிப்பெருவிழாவின் ஐந்தாம் திருநாளான வருகிற 13-ந்தேதி காலையில் அதிகார நந்தி கோபுர தரிசனமும், இரவு 10 மணிக்கு தெருவடைச்சான் சப்பரம் வீதி உலாவும் நடைபெறுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய தெருவடைச்சான் சப்பரம் பாடலீஸ்வரர் கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 9-ம் திருநாளான 17-ந் தேதி காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. வருகிற 21-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். 
Tags:    

Similar News