ஆன்மிகம்

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி விரதம்

Published On 2019-05-01 07:51 GMT   |   Update On 2019-05-01 07:51 GMT
சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அல்லது பாபமோசினி ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏகாதசிகளில் மேற்கொள்ளும் விரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரவல்லது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அல்லது பாபமோசினி ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

புராணங்களின்படி மஞ்சுகோஷா எனப்படும் தேவலோக பெண் மேதாவி முனிவரை காம வயப்படுத்தி, அவரின் தவம் வெற்றி பெறுவதை தடுத்தாள். இந்தப் பாவச் செயல் காரணமாக மஞ்சுகோஷா பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அப்போது அவள் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, தனது பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலன்களை அடைந்தாள்.

எனவே தான் இந்த சித்திரை தேய்பிறை ஏகாதசி தினம் பாபமோசினி ஏகாதசி விரதம் என அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு வாசமிக்க மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி கற்கண்டுகள் அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து, பெருமாள் லட்சுமி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம்.

மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட இனிப்புகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது பாபநாசினி விரதம் மேற்கொள்வதன் பிரதான நோக்கமே நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவச் செயல்களின் வினைப் பயன் போக்குவது தான். மேலும் நம் வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும் செய்கிறது இந்த பாபநாசினி ஏகாதசி விரதம்.
Tags:    

Similar News