ஆன்மிகம்

திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகும்

Published On 2019-04-04 06:25 GMT   |   Update On 2019-04-04 06:25 GMT
திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப்பேறு இல்லாதவர்கள் திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிடை மருதூரில் மகாலிங்கோஸ்வரர் என்ற பெயரில் சிவன் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இவரை சித்தசுவாதினம், மனநோயல் பாதிக்கப்பட்டவர்கள், இவர் முன் நின்று வணங்கினால் நோய்கள் விலகி நலம் பெற்று புத்துணர்ச்சியுடன் செல்கின்றனர்.

 மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச் செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.

தற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப்பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும்.

தொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும்.

தொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.

திருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Tags:    

Similar News