search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடுமையான பொருளாதார நெருக்கடி - சூடான் அரசாங்கத்தை கலைத்தார் அதிபர் பஷிர்
    X

    கடுமையான பொருளாதார நெருக்கடி - சூடான் அரசாங்கத்தை கலைத்தார் அதிபர் பஷிர்

    உள்நாட்டு போரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சூடான் சிக்கித்தவித்து வரும் நிலையில் அரசாங்கத்தை கலைத்து அதிபர் பஷிர் உத்தரவிட்டுள்ளார். #OmaralBashir
    கார்டோவும் :

    தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.

    உள்நாட்டு போர் காரணமாக சூடானில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் கட்டுப்பாடற்று அதிகரித்துள்ளது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால் வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கருப்பு சந்தை உருவானது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.

    இதனால் நிலைமை இன்னும் மோசமாகி கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் அரசாங்கம் தடுமாறியது. மானியங்களை அரசு தடை செய்ததால் ஜனவரி மாதம் முதல் ரொட்டிகளின் விலை இரண்டு மடங்கானது. இதன் காரணமாக மக்கள் அமைதி இழந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.

    மேலும், ஏறக்குறைய நாட்டில் உள்ள சரிபாதி ஜனத்தொகை போதுமான உணவின்றி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அதிபர் ஓமர் அல் பஷிர் தலைமையில் இன்று அவசர அவசரமாக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் சூடான் அரசாங்கம் கலைக்கப்படுவதாக அதிபர் பஷிர் அறிவிப்பு வெளியிட்டார்.

    மந்திரிசபையின் எண்ணிக்கையையும் 31-ல் இருந்து 21 ஆக குறைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #OmaralBashir
    Next Story
    ×