search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு
    X

    ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

    ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்துள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
     
    பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.



    மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

    தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் 15 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் பலர் அட்சுமா கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. #Japanquake  #Hokkaidoquake
    Next Story
    ×