search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்ததாக சிரியா அறிவிப்பு
    X

    ஈரான் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் செலுத்திய ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்ததாக சிரியா அறிவிப்பு

    சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலை நடுவானிலேயே சிரியா இடைமறித்து தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #SyriaStrikes
    டமாஸ்கஸ்:

    அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

    புரட்சி படையினருக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன.

    இந்நிலையில், சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் செலுத்திய ஏவுகணைகளை நடுவானிலேயே சிரியா ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்துள்ளது.

    டார்டோஸ் மற்றும் ஹமா பகுதிகளில் உள்ள ஈரானுக்கு சொந்தமான ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் என ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    அதில் 5 ஏவுகணைகள் நடுவானிலேயே ஏவுகணை எதிர்ப்பு சிஸ்டம் மூலமாக இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது. ஹமா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகே இரண்டு ஏவுகணைகள் வெடித்தது என சிரியா ராணுவம் நேற்று அறிவித்துள்ளது.

    இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியானதாகவும், மேலும், ஈரானை சேர்ந்த 9 வீரர்களும் சிரியாவை சேர்ந்த 14 ராணுவ  வீரர்கள் என மொத்தம் 23 வீரர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், தங்களது ராணுவம் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை என இஸ்ரேல் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

    அரபு நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சிரியாவும இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலின் எல்லையில் சிரியா அமைந்துள்ளது. இதனால் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடப்பது உண்டு.

    இதற்கு முன்னதாக கடந்த 18 மாதங்களில் மட்டும்  சிரியாவில் 200-க்கும் மேற்பட்ட  வான் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. அப்போதெல்லாம் சிரியாவில் உள்ள ஈரான் கூட்டுப்படைகள் மற்றும் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் காரணங்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #SyriaStrikes
    Next Story
    ×