search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக மந்திரியுடன் சந்திப்பு
    X

    இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக மந்திரியுடன் சந்திப்பு

    இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக மந்திரியை சந்தித்து பேசினார்.
    அபுதாபி:

    இந்திய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு வந்தார். அபுதாபி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் அமீரகம் வந்தார். அப்போது இந்தியா மற்றும் அமீரகத்துக்கும் இடையே எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


    இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான அட்நாக் 20 லட்சம் பேரல்கள் கொண்ட கச்சா எண்ணெய்யை முதலாவதாக மங்களூர் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த பணியை இந்திய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக எரிசக்தித்துறை துணை மந்திரி சுல்தான் அல் ஜாபர் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த கச்சா எண்ணெயை தேக்கி வைக்கும் வகையில் மங்களூரில் 1 கோடியே 10 லட்சம் பேரல்களும், விசாகப்பட்டினத்தில் 97 லட்சத்து 77 ஆயிரம் பேரல்களும் மற்றும் பாடூரில் 1 கோடியே 83 லட்சத்து 70 ஆயிரம் பேரல்களும், அதனை தேக்கி வைக்கக்கூடிய இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தேக்கி வைக்கப்படும் கச்சா எண்ணெய்யை தனது தேவைக்கு இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை பார்வையிட்ட பின்னர் அமீரக எரிசக்தித்துறை துணை மந்திரி சுல்தான் அல் ஜாபருடன், இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.

    அதில் எரிசக்தித்துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, பெட்ரோலியம் தொடர்பான உள்கட்டமைப்பு பணிகளில் அமீரக நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து பேசப்பட்டது. இந்திய எரிசக்தித்துறையின் மேம்பாட்டு பணிகளில் பங்கேற்குமாறு அமீரகத்தைச் சேர்ந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இந்திய மந்திரி அழைப்பு விடுத்தார்.

    இந்த சந்திப்பை தொடர்ந்து இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் பேரில் இந்திய மந்திரி, இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் இந்திய தூதர் நவ்தீப்சிங் உடன் இருந்தார்.

    இதில் அபுதாபியில் உள்ள இந்திய சார்டர்ட் அக்கவுண்டண்ட் அமைப்பு, இந்திய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    துபாயில் நாளை (திங்கட்கிழமை) எரிசக்தி துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இந்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொள்கிறார். இதில் அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

    அவர்களுக்கு இந்திய எரிசக்தி துறை குறித்து காணொலிக்காட்சி காண்பிக்கப்படும்.  #DharmendraPradhan
    Next Story
    ×