search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையதளங்களில் தீவிரவாதக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க வேண்டும்: ஜி7 நாடுகள் கோரிக்கை
    X

    இணையதளங்களில் தீவிரவாதக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க வேண்டும்: ஜி7 நாடுகள் கோரிக்கை

    இணையதளம் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தீவிரவாதக் கருத்துகள் பரவுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்று ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
    ரோம்:

    அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி7 அமைப்பின் கூட்டம் இத்தாலியின் டவோர்மினாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் அந்நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு சர்வதேச நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். 

    பின்னர் அக்கூட்டத்தில், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள், இணையதள சேவை மற்றும் சமூக வலைதள சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகள் வழியாக பயங்கரவாதத் தகவல்கள் பரவுவதன் ஆபத்தை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்போது அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதாத நிலையில், அவர்களுடைய ஊடகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

    உலகில் அமைதி நிலவுவதில் நவீன மின்னணு ஊடகங்களின் பங்களிப்பு மிகப் பெரிதாகும். பயங்கரவாதம், வன்முறையைத் தூண்டும் தகவல் பரிமாற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் இணையதள சேவை நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய மென்பொருள்களை உருவாக்க வேண்டும். தற்போது வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான போதனைகள் இணையதளம் மூலமாகவே பரவுகிறது. இணையதளம் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பயங்கரவாதக் கருத்துகள் பரவுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும். 

    இன்றைய நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இணையதள சேவை நிறுவனங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தங்களாலான ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஊடக நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஜி7 நாடுகளின் அரசுகள் முழு ஒத்துழைப்பையும் அனைத்து உதவிகளையும் அளிக்கும். போர்க்களத்தில் நடைபெற்று வந்த சண்டை என்பது போய், தற்காலத்தில் இணையதளம் வழியாக சண்டை நடைபெற்று வருகிறது என்றே கூறலாம்.

    சிரியா போன்ற நாடுகளில் சண்டையிட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும்போது அவர்களைக் கைது செய்யும் விதமாக, உலக நாடுகளைச் சேர்ந்த காவல் துறையினர் தங்கள் வசம் உள்ள தகவல்களை பிற நாடுகளுடன் உடனடியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜி7 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×