search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல்.
    X
    சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேல்.

    சேலம் ரவுடி என்கவுண்டரில் தொடரும் மர்மங்கள்

    சேலம் ரவுடி என்கவுண்டரில் புதிய பஸ் நிலையம், அதனை சுற்றியுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). முறுக்கு வியாபாரி. இவர் கடந்த மாதம் 5-ந் தேதி சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்தபோது கணேசனை அயோத்தியாப்பட்டணம் தேவாங்கூர் காலனியை சேர்ந்தவர் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் மற்றும் கதிர்வேல் (வயது 28) உள்பட சிலர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

    மேலும் பட்டர் பிளை மேம்பாலத்தில் ஆபாச படம் எடுத்து மிரட்டி வழிப்பறி செய்தது தொடர்பாக கணேசன் அப்ரூவர் ஆனதால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் கதிர்வேல் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் ரவுடி கத்தியால் தாக்கியதில் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் காயம் அடைந்தனர்.

    அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்த கதிர்வேல் உடலை சேலம் ஜே.எம்.3 கோர்ட் மாஜிஸ்திரேட்டு சரவணபவன் பார்வையிட்டு நேற்று விசாரணை நடத்தினர். அவரது உறவினர்களிடமும் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்தார். துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கும் சென்று அவர் விசாரணை நடத்தினார்.

    இதே போல மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவும் சம்பவ இடம் மற்றும் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். பின்னர் கதிர்வேல் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கதிர்வேல் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது.

    ரவுடி கதிர்வேல் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது. சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் இரவு கதிர்வேலை போலீசார் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் கைது செய்ததாகவும், முறுக்கு வியாபாரி கணேசனை கொலை செய்த ஆயுதங்களை குள்ளம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதனை எடுக்க போலீசார் கதிர்வேலை அழைத்து சென்றபோது அவர் போலீசாரை தாக்கியதாகவும் அப்போது அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது.

    பின்னர் கதிர்வேல் குள்ளம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்தாகவும், அவரை பிடிக்க சென்றபோது போலீசாரை அவர் கத்தியால் குத்தியதால் போலீசார் தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எப்படி இந்த என் கவுண்டர் நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது. மேலும் கணேசன் கொலையில் சரணடைந்த முத்து பழனிசாமி ஆகிய 2 பேரும் போலி குற்றவாளிகள் என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து உறவினர்கள் கூறும்போது சுட்டுக்கொல்லும் அளவுக்கு கதிர்வேல் பெரிய ரவுடி இல்லை என்றும் , உள் நோக்கத்துடன் என்கவுண்டர் செய்து கதிர்வேலை அநியாயமாக கொன்றதாக கூறி உள்ளனர்.

    எனவே இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர் 1-ந் தேதியே கைது செய்யப்பட்டாரா? என்பதை உறுதி செய்ய சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×