search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்றாலையில் உற்பத்தி குறைந்தது - மின் தடையால் பொதுமக்கள் அவதி
    X

    காற்றாலையில் உற்பத்தி குறைந்தது - மின் தடையால் பொதுமக்கள் அவதி

    காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டதால் குமரி மாவட்டத்திற்கு வரும் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். இதனால் மின்தடை ஏற்படுகிறது என மின்வாரிய அதிகாரி கூறினார். #Powercut
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பொதுவாக தென்மேற்கு பருவ மழை மற்றும் வட மேற்கு பருவமழை காலங்களின்போது மாவட்டம் முழுவதுமே நல்ல மழை பெய்யும்.

    இதனால் இங்குள்ள அணைகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி காட்சி அளிக்கும். மேலும் இங்குள்ள இயற்கை சூழல் காரணமாக வெயிலின் தாக்கமும் அதிகமாக தெரியாது. இதுபோன்ற காரணங்களால் குமரி மாவட்டத்தில் குளு, குளு காலநிலை நிலவும்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தை ஒகி புயல் தாக்கியதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதால் குமரி மாவட்டத்தின் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மேலும் பருவ மழையும் குறைந்து விட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் கோடை காலத்தைப் போல இப்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தற்போது மின் தடையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெயிலின் தாக்கம் காரணமாக தற்போது மின்சார தேவை அதிகரித்து உள்ள நிலையில் அதற்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லாததால் இந்த மின்தடை ஏற் பட்டு உள்ளது. காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின்சாரமும் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது இதுவும் மின்தடைக்கு ஒரு காரணமாக உள்ளது.

    நேற்று முன்தினம் பகல், இரவு நேரங்களில் மின் தடை அதிகளவு காணப்பட்டது. நேற்றும் மின்சாரம் பல முறை தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை நிலவுகிறது.

    தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் இரவு மற்றும் அதிகாலையில் மாணவ, மாணவிகள் விழித்திருந்த தேர்வுக்காக படித்து வருகிறார்கள். இந்த மின்தடை காரணமாக அவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். தற்போது காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. அதே போல தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் குமரி மாவட்டத்திற்கு வரும் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். இதனால் மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி சீரானதும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Powercut

    Next Story
    ×