search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிமுத்தாறு மலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்தபோது எடுத்த படம்.
    X
    மணிமுத்தாறு மலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடந்தபோது எடுத்த படம்.

    களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது

    ஆண்டு தோறும் மலையில் வாழும் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். இதன்படி நடப்பாண்டு பருவ மழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால்குரங்கு, செந்நாய்கள், நீலகிரி வரையாடு, கடமான் உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் வசிக்கின்றன.

    இதுபோல மூலிகை செடிகளும் உள்ளன. ஆண்டு தோறும் மலையில் வாழும் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். இதன்படி நடப்பாண்டு பருவ மழைக்கு முந்தைய கணக்கெடுப்பு பணி இன்று (11-ந் தேதி) தொடங்கியது.

    இதையொட்டி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறையினருக்கு நேற்று களக்காடு தலையணையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஆராய்ச்சியாளர் ஸ்ரீதர் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பயிற்சி அளித்தார். கணக்கெடுப்பு குழுவினருக்கு மருந்து, மாத்திரைகள், உணவு தயாரிக்க சமையல் பொருட்கள் உள்பட 22 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    பயிற்சி முடிந்ததும் நேற்று மாலையில் கணக்கெடுப்பு குழுவினர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று அதிகாலையில் அவர்கள் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கினர். களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின் படி துணை இயக்குனர் ஆரோக்கிய ராஜ் சேவியர் கணக்கெடுப்பை தொடங்கி வைத்தார். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் 21 இடங்களில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்பர் கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும், களக்காடு, திருக்குறுங்குடி வனசரகங்களில் தலா 8 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் புலிகளை நேரில் காண்பது, அவைகளின் கால்தடங்கள், எச்சங்களை சேகரிப்பது, மற்றும் அடையாளங்களை கண்டெடுத்தல் முறைகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    வருகிற 17-ந் தேதி மாலை வரை அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியிருந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர். முதல் 3 நாட்கள் புலி, சிறுத்தை மற்றும் பிற மாமிச உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் குளம்பினங்களின் நடமாட்டம் குறித்தும், கணக்கெடுப்பு நடத்துகின்றனர். பின்னர் 7-ம் நாள் சேகரித்த புள்ளி விபரங்களை அறிக்கையாக தயார் செய்கின்றனர். பின்னர் 8-ம் நாள் அறிக்கைகளையும், சேகரிக்கப்பட்ட வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்களை அதிகாரிகளிடம் சமர்பிக்கின்றனர்.

    வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியால் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நேற்று முதல் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல பாபநாசம் முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதி, மணிமுத்தாறு மலைப்பகுதியிலும் புலிகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. அம்பை வனச்சரக வனவர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டார்கள்.
    Next Story
    ×